Translate

இந்த வலைப்பதிவில் தேடு

பட்டாசு ஆலை வெடிவிபத்து: உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு தமிழக அரசின் சார்பில் நிவாரண உதவி

காஞ்சிபுரம் அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசின் சார்பில் நிவாரண நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி முதலமைச்சர் அறிவித்த மூன்று லட்ச ரூபாய்க்கான காசோலையை பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி வழங்கினார்.

காஞ்சிபுரம் அருகே வளத்தோட்டம் பகுதியில் செயல்பட்டு வந்த பட்டாசு தொழிற்சாலையில் கடந்த 18-ம் தேதி திடீர் வெடி விபத்து நடைபெற்றது. இந்த விபத்தில் சிக்கி 27 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் ஒன்பது பேர் உயிரிழந்தனர். 18 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வெடி விபத்தில் சிக்கி உயிரிழந்த 9 பேரின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்குப்பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டது.

image

இதனைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களின் (குருவிமலை கிராமத்தைச் சேர்ந்த தேவி, சசிகலா, கோடீஸ்வரி, வளத்தோட்டம் கிராமத்தைச் சேர்ந்த விஜயா, கங்காதரன், காஞ்சிபுரம் தாயார்குளம் பகுதியைச் சேர்ந்த பூபதி, சாமந்திபுரம் கிராமத்தைச் சேர்ந்த முருகன், சங்குபாணி விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்த கௌதம் உள்ளிட்ட 8 பேரின்) குடும்பங்களை சேர்ந்தவர்களை நேரில் சந்தித்தார் காஞ்சிபுரம் ஆட்சியர் ஆர்த்தி.

மாவட்ட ஆட்சியர் ஆர்த்தியுடன் இணைந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகரும், உயிரிழந்தோரின் குடும்பத்தினரிடம் ஆறுதல் கூறி, தமிழ்நாடு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து அறிவிக்கப்பட்ட தலா 3 லட்ச ரூபாய்க்கான நிவாரண உதவி காசோலையை அவர்களுக்கு வழங்கினர்.

image

மேலும் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தங்களுக்கு தேவையான உதவிகளை எப்போது வேண்டுமானாலும் அரசிடமும் அரசாங்க அதிகாரிகளிடமும் கேட்டு பெறலாம் என நம்பிக்கையளித்து அனுப்பி வைத்தனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



source http://puthiyathalaimurai.com/newsview/157345/Tamil-Nadu-Government-to-provide-relief-fund-to-the-families-of-those-who-died-in-the-firecracker-factory-explosion.html

0 Comments:

கருத்துரையிடுக

Thanks for Read the post