Translate

இந்த வலைப்பதிவில் தேடு

ஜெ.மரண விசாரணை: என்மீதே குற்றஞ்சாட்டுவதா? - விஜயபாஸ்கரின் வாதமும் ஐகோர்ட் உத்தரவும்!

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் தன்னை பற்றி குறிப்பிடப்பட்டுள்ள பத்திகளை நீக்குமாறு கேட்டு வழக்குத் தொடர்ந்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் மனு மீது முக்கிய உத்தரவை பிறப்பித்திருக்கிறது உயர் நீதிமன்ற மதுரைக்கிளை.

தமிழகத்தின் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "தேர்தல் மூலமாக தமிழக மக்களால் தேர்வு செய்யப்பட்டு பிரபலமான நபராக பணியாற்றேன். கடந்த 2013 முதல் 2021 ஆம் ஆண்டு வரை எட்டு ஆண்டுகள் தமிழகத்தின் சுகாதாரத்துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளேன்.

பொதுமக்கள் இடையே எனக்கு நற்பெயர் உள்ளது. இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை கடந்த 2022 ஆகஸ்ட் 23ஆம் தேதி வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில் என் மீது கூறப்பட்டிருக்கும் கருத்துகள் எவ்விதமான சட்ட அடிப்படையும் இல்லாமல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாட்சியாக என்னை விசாரணை ஆணையம் அழைத்துவிட்டு, என் மீது குற்றச்சாட்டுகளை முன் வைத்திருப்பது ஏற்கத்தக்கது அல்ல. ஆகவே ஆறுமுகம் சாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கையில் என் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும் பத்தி 39.1, 39.7, 47.28 ஆகியவற்றிற்கும் அதனை யாரும் பயன்படுத்தவும் இடைக்கால தடை விதிக்க வேண்டும். ஆறுமுகம் சாமி ஆணையத்தின் அறிக்கையில் எனது பெயரை பயன்படுத்தி குறிப்பிடப்பட்டிருக்கும் விவரங்களை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

ஆறுமுகசாமி ஆணையம் முன்பு சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆஜர் | ஆறுமுகசாமி ஆணையம் முன்பு சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆஜர் ...

இந்த வழக்கு நேற்று (பிப்.,28) அவசர வழக்காக நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பாக முறையீடு செய்யப்பட்டு விசாரணைக்கு எடுக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கையில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பெயர் பயன்படுத்தப்பட்டிருக்கும் பத்திகளுக்கும், அதனை பயன்படுத்தவும் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

இந்நிலையில், இன்று (மார்ச் 1) தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் தரப்பில்,ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கையில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பெயர் பயன்படுத்தப்பட்டிருக்கும் பத்திகளுக்கும், அதனை பயன்படுத்தவும், அதனடிப்படையில் நடவடிக்கை எடுக்கவும் விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்குமாறு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு முறையீடு செய்தார்.

ஆறுமுகசாமி ஆணையம் சமர்ப்பித்த அறிக்கையின் மீதான சட்ட நடவடிக்கை ஆரம்ப கட்டத்தில் உள்ளது. எனவே, இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல. நீதிபதி ஆறுமுகசாமி அறிக்கையானது சட்டசபையில் விவாதிக்கப்பட்டு பொதுவெளியில் வெளியிடப்பட்டுள்ளது. எனவே, இடைக்கால தடையை நீக்க வேண்டும் என முறையிட்டார்.

ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை: விஜயபாஸ்கர் தொடர்புடைய பத்திகளுக்கு இடைக்கால தடை!

அதற்கு நீதிபதி, LK அத்வானி மற்றும் உச்ச நீதிமன்றத்தின் பல்வேறு வழக்குகளை சுட்டிக் காட்டி இடைக்கால தடையை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்தார். மேலும், விசாரணைக்காக அழைத்து, மனுதாரர் மீது குற்றம் சாட்டுவது எப்படி? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து, ஆறுமுகசாமி ஆணையத்தை இந்த வழக்கில் எதிர்மனுதாரராக சேர்த்து உத்தரவிட்ட நீதிபதி, ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையின் அடிப்படையில் முன்னாள் சுகாதாரத் துறைச் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது. ஆனால் தனிநபர் குற்றச்சாட்டு வேறு குற்றச்சாட்டுகள் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பது குறித்து எந்த கருத்தையும் நீதிமன்றம் தெரிவிக்க விரும்பவில்லை என தெரிவித்து வழக்கு விசாரணையை மார்ச் 24ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



source http://puthiyathalaimurai.com/newsview/156209/madurai-hc-denies-to-withdraw-interim-order-on-vijayabaskar-plea-about-arumugasamy-commission.html

0 Comments:

கருத்துரையிடுக

Thanks for Read the post