
“வாட்ஸ்அப் மூலம் வரும் தகவல்களில் எது உண்மை செய்தி, எது பொய் செய்தி என்பதை அறிந்து கொள்ளும் பகுத்தறிவை மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்” என அமைச்சர் உதயநிதி பேசியுள்ளார்.
சென்னை பெருநகர காவல்துறை சார்பில் நடத்தப்பட்ட போதைப் பொருட்களுக்கு எதிரான சிறப்பு நடவடிக்கை குறித்த ஆவண திரைப்பட போட்டியில் வெற்றி பெற்ற நபர்களுக்கு பரிசுகளை வழங்கும் நிகழ்ச்சி சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் திரையரங்கில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி, பெருநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால், இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த போதை பொருட்கள் பயன்பாட்டிற்கு எதிரான போராட்டத்தில் இளைஞர்களை ஈடுபடுத்தும் நோக்கில் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆதரவுடன் நடத்தப்பட்ட ஆவண திரைப்படப் போட்டியில் 289 பதிவுகள் பெறப்பட்ட நிலையில், அதில் வெற்றி பெற்ற 4 குழுக்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பேசும் போது, “பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை கட்டாயம் பேணிகாக்க வேண்டும். அதனையும் தாண்டி போதை பொருட்களை ஒழிக்க சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என நம் முதல்வர், கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதம் தெரிவித்தார். இதையடுத்து கடந்த 2 ஆண்டுகளில் 2 விதங்களில் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். அதன்கீழ் ஒருபக்கம் இதுவரை இல்லாத அளவிற்கு போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. மற்றொருபுறம் போதை பொருட்களை தடுக்க விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம்.
அந்த நேரத்தில்தான் குறும்படங்கள் போட்டி நடத்துவது குறித்த ஆலோசனை வந்தது. எத்தனை நபர்கள் இதில் பங்கேற்பார்கள் என சந்தேகம் இருந்தது. இருந்தாலும் குறைந்த நேரத்தில் 300-க்கும் மேற்பட்ட குறும்படங்கள் வந்துள்ளன. அவற்றில் முதல் 3 இடங்களை பிடித்த நபர்களுக்கு பரிசு வழங்கப்பட உள்ளது. இந்த குறும்படங்கள் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஒளிபரப்பு செய்யபடும். நிச்சயம் போதை பொருட்களை ஒழிக்க தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்றார்.

இதையடுத்து பேசிய அமைச்சர் உதயநிதி, “நிறைய நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிபெருக்கி மூலம் போடுகின்ற நேரத்தில் யாரும் பாடாமல் இருப்பார்கள். ஆனால் இன்றைய நிகழ்ச்சியில் மாணவர்கள் எழுச்சியோடு பாடினார்கள். அனைத்து நிகழ்ச்சியிலும் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
போதை பொருள் தடுப்பு நடவடிக்கை தொடர்ந்து மேற்கொண்டு வரும் இந்த நேரத்தில், மாணவர்கள் அதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். வாட்ஸ்-அப் உலகமாக தற்போது எல்லாமே மாறி வருகிறது. நாமும் வாட்ஸ் அப்-ல் வரும் செய்தி உண்மையா பொய்யா என தெரியாமல் அதனை பகிர்ந்து வருகிறோம். எனவே மாணவர்கள், உண்மையான செய்தி எது - பொய்யான செய்தி எது என்பதை அறிந்துகொள்ள பகுத்தறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
உண்மை செய்தி செல்ல அதிக நேரம் எடுக்கும். ஆனால் அதற்குள், பொய் செய்தி வேகமாக பரவுகிறது. கடந்த 15 நாட்களில் தமிழகத்தில் நடந்தது என்ன என்பது அனைவருக்கும் தெரியும். எனவே, மாணவர்கள் அனைவரும் தங்கள் பகுத்தறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும்” என்றார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
source http://puthiyathalaimurai.com/newsview/157407/To-know-whether-the-news-is-true-or-false-one-must-develop-intelligence.html






0 Comments:
கருத்துரையிடுக
Thanks for Read the post