Translate

இந்த வலைப்பதிவில் தேடு

உசிலம்பட்டி: குழந்தைகளுக்கு நாளை காதணி விழா... குடும்பத்தகராறில் தாய் எடுத்த விபரீத முடிவு

உசிலம்பட்டி அருகே குழந்தைகளுக்கு நாளை காதணிவிழா நடைபெற இருந்த நிலையில், குடும்பத்தகராறில் தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கே.போத்தப்பட்டியைச் சேர்ந்தவர்கள் அமர்நாத் - மீனா என்ற தம்பதியர். இவர்களுக்கு 5 வயதில் ஒரு ஆண் குழந்தையும், 3 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். இரண்டு குழந்தைகளுக்கும் நாளை (26 ஆம் தேதி) காதணி விழா நடத்த திட்டமிட்டிருந்த பெற்றோர் அமர்நாத் - மீனா, கடந்த சில தினங்களாகவே அதற்கான ஏற்பாடுகளில் மும்முரமாக இருந்துள்ளனர்.

image

இந்நிலையில், நேற்று மனைவி மீனாவுடன் ஏற்பட்ட குடும்பத்தகராறில் கணவன் அமர்நாத் வெளியே சென்றிருக்கிறார். அந்த நேரத்தில் வீட்டில் மீனா தூக்கிட்டு தற்கொலை செய்ததாக சொல்லப்படுகிறது. தூக்கிட்ட நிலையில் மீனா இறந்துகிடந்ததையொட்டி, அங்கிருந்தவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற உசிலம்பட்டி நகர் போலீசார், மீனாவின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

image

இதையடுத்து உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு சென்ற மீனாவின் உறவினர்கள், அவர் இறப்பில் சந்தேகம் உள்ளதாக குற்றம்சாட்டி உடலை ஏற்றி வந்த ஆம்புலன்ஸ் வாகனத்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து உறவினர்களுக்கிடையே ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைத் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதைத்தொட்ர்ந்தே அவர்கள் கலைந்து சென்றனர். தற்கொலைக்கான காரணம் இதுவரை முழுமையாக தெரியவரவில்லை. இச்சம்பவம் உசிலம்பட்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104 , சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம். இதன்மூலம் இலவச ஆலோசனைகள் பெறலாம்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



source http://puthiyathalaimurai.com/newsview/157392/A-tragic-decision-taken-by-the-mother.html

0 Comments:

கருத்துரையிடுக

Thanks for Read the post