Translate

இந்த வலைப்பதிவில் தேடு

ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதி சர்வதேச கடத்தல் மாஃபியாக்களின் கூடாரமாக மாறி வருகிறதா?

இலங்கையில் இருந்து படகு மூலம் நான்கு மாதங்களில் கடத்திவரப்பட்ட ரூ.45 கோடி மதிப்பிலான 90 கிலோ தங்கம் மற்றும் ரூ.60 கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல்; செய்யப்பட்டுள்ள நிலையில், சர்வதேச கடத்தல் மாஃபியாக்களின் கூடாரமாக ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதி மாறிவருகிறதா? ஒரு செய்தித் தொகுப்பு.

நேற்று காலை இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்டு மண்டபம் தெற்கு மீன்பிடி துறைமுகம் அருகே நடுக்கடலில் தூக்கி வீசப்பட்ட ரூ.10.5 கோடி மதிப்பிலான 17.7 கிலோ தங்கக் கட்டிகளை மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து மண்டபத்தைச் சேர்ந்த மூவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

image

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடி இலங்கைக்கு மிக அருகில் உள்ளதால் சர்வதேச கடல் எல்லை வழியாக தமிழகத்திலிருந்து கஞ்சா, ஐஸ் போதை பொருள், சமையல் மஞ்சள், ஏலக்காய், வலி மாத்திரைகள் உள்ளிட்ட பொருட்கள் இலங்கைக்கு கடத்தப்பட்டு வருகிறது. அதேபோல் இலங்கையில் இருந்து சட்டவிரோதமான முறையில் தங்க கட்டிகள் மன்னார் வளைகுடா கடல் வழியாக வேதாளை, மரைக்காயர்பட்டிணம் மற்றும் மண்டபம் கடற்கரை பகுதிக்கு கடத்தி வரப்படுகிறது.

இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவு இலங்கையிலிருந்து கடத்தல் தங்கம் நாட்டுப்படகில் மண்டபம் அடுத்துள்ள வேதாளைக்கு கடத்தி வர இருப்பதாக மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து இந்திய கடலோர காவல் படைக்குச் சொந்தமான ரோந்து கப்பலில் கூட்டு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

image

அப்போது நாட்டுப் படகு ஒன்று அங்கிருந்து தப்பிக்க முயன்றது. இதனால் சந்தேகமடைந்த இந்திய கடலோர காவல் படையினர் நாட்டுப் படகை நடுக்கடலில் மடக்கி பிடிக்க முயற்சி செய்தனர் அப்போது படகில் இருந்த நபர்கள் கடலில் ஒரு பார்சலை தூக்கி வீசியுள்ளனர். இதையடுத்து அந்த படகிலிருந்த மூவரையும் பிடித்து இந்திய கடலோர காவல்படை மண்டபம் முகாமுக்கு அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில், வேதாளையைச் சேர்ந்த ஒருவருக்காக இலங்கை நபர்களிடம் இருந்து தங்க கட்டிகள் கொண்ட பார்சலை சர்வதேச கடலில் வைத்து வாங்கிக் கொண்டு மண்டபம் தெற்கு மீன்பிடி துறைமுகம் நோக்கி வந்து கொண்டிருந்ததாகவும். அப்போது நடுக்கடலில் இந்திய கடலோர காவல் படை ரோந்து கப்பலை கண்ட உடன் கைது நடவடிக்கைக்கு அஞ்சி தங்க கட்டிகள் கொண்ட பார்சலை கடலில் வீசியதாக படகில் இருந்தவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

image

இதையடுத்து நேற்று புதன்கிழமை காலை மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் மற்றும் இந்திய கடலோர காவல் படை வீரர்கள், மண்டபம் தெற்கு மீன் பிடித்து துறைமுகத்தில் ஸ்கூஃபா டைவர்ஸ் உதவியுடன் கடலில் வீசிய பார்சலை தேடினர். ஆனால், நேற்று காற்றின் வேகம் சற்று உயர்ந்து கடல் சீற்றத்துடன் கடல் நீர் தெளிவில்லாமல் இருந்ததால் அவர்களால் தொடர்ந்து தேட முடியவில்லை இதனால் நேற்று மாலை தற்காலிகமாக தேடும் பணியை நிறுத்தினர்.

இதைத் தொடர்ந்து நாட்டுப் படகில் இருந்து கைது செய்யப்பட்ட மூவரையும்; அழைத்துச் சென்ற மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் பார்சலை கடலில் வீசிய இடத்தை காண்பிக்க செய்து அங்கு இந்திய கடற்படையைச் சேர்ந்த பயிற்சி பெற்ற ஸ்கூஃபா டைவிங் வீரர்களை கொண்டு கடலுக்கு அடியில் தீவிரமாக தேடினர். இதையடுத்து நேற்று மதியம் மண்டபம் தெற்கு மீன்பிடிக்க துறைமுகத்திற்கு அருகே கடலுக்கு அடியில் துணியால் மூடப்பட்ட ஒரு பொருள் ஸ்கூஃபா டைவிங் வீரர்களின் கையில் சிக்கியது. அதை திறந்து பார்த்தபோது அதில், சின்ன சின்ன பாக்கெட்களாக 14 பொட்டலங்கள் இருந்தது.

image

இந்நிலையில், அந்த பார்சலை கைப்பற்றி, இந்திய கடலோர காவல் படைக்குச் சொந்தமான மண்டபம் முகாமுக்கு எடுத்து வந்து அதை முழுமையாக ஆய்வு செய்தனர். அப்போது அதில் தங்க கட்டிகள், தங்க சங்கிலிகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து நகை மதிப்பீட்டாளரை அழைத்து அளவிட்ட போது அதில், 17.7 கிலோ தங்கம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த படகில் இருந்து பிடிபட்ட மண்டபத்தைச் சேர்ந்த நாகூர் கனி, ஷாகுபர் சாதிக் மற்றும் மரைக்காயர்பட்டிணத்தைச் சேர்ந்த சமீர் ஆகிய மூவர் மீது வழக்குப் பதிவு செய்து சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குறிப்பாக தனூஷ்கோடி வழியாக இலங்கையிலிருந்து கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் டிசம்பர் வரையிலான நான்கு மாதத்தில் மட்டும் ரூ,45 கோடி மதிப்பிலான 90 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், கடந்த டிசம்பர் மாதம் 12 ஆம் தேதி மண்டபத்திலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ, 60 கோடி மதிப்பிலான போதைப்பொருள்கள் மற்றும் மாத்திரைகளை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த வருடத்தில் மட்டும் ரூ,76 கோடி மதிப்பிலான 147 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

image

இந்த ஆண்டில் நேற்ற மட்டும் ரூ.10.5 கோடி மதிப்பிலான 17.7 கிலோ தங்கம் மண்டபம் கடலில் கைப்பற்றப் பட்டதாக தெரிவித்த மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர், தங்கக் கடத்தலில் ஈடுபடுபவர்களை கண்காணித்து அவர்களது கடவுச்சீட்டு மற்றும் வங்கிக் கணக்குகளை முடக்க மத்திய வருவாய் புலனாய்வுத் துறை உயர் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். விரைவில் மரைக்காயர்பட்டிணம், வேதாளை, மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் கடத்தல் சம்பவங்கள் முற்றிலும் தடுத்து நிறுத்துவதற்குத் தேவையான நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், கடந்த 2022-ல் ராமநாதபுரம் மாவட்ட சுங்கத்துறை, மரைன் போலீசார், இந்திய கடலோரகாவல் படையினர் மற்றும் மாவட்ட காவல்துறையின் சிறப்பு பிரிவினர் ஆகியோர் தனூஷ்கோடி வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற சுமார் ரூ,25 கோடி மதிப்பிலான கடல் அட்டைகள், கஞ்சா, பீடிஇலைகள், வலி மாத்திரைகள், சமையல் மஞ்சள், மற்றும் குட்கா புகையிலை உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

image

இந்திய - இலங்கை சர்வதேச கடல் எல்லை மற்றும் மன்னார் வளைகுடா கடல் வழியாக நடைபெறும் சட்ட விரோத நடவடிக்கைகளை தடுப்பதற்கு கண்காணிப்பை அதிகரிக்க முடிவு செய்துள்ளதாகவும், நடுக்கடலில் மீன் பிடிக்கும் மீனவர்கள் கடலில் அன்னிய நபர்கள் ஊடுருவல் அல்லது சட்டவிரோத நடவடிக்கைகள் நடந்தால் உடனடியாக இந்திய கடலோர காவல் படைக்கு தகவல் அளிக்குமாறு மீனவ கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாக இந்திய கடலோரகாவல் படை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர்: அ.ஆனந்தன்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



source http://puthiyathalaimurai.com/newsview/155311/Is-the-coastal-area-of-------Ramanathapuram-district-becoming-a-den-of-international-smuggling-mafias.html

0 Comments:

கருத்துரையிடுக

Thanks for Read the post