Translate

இந்த வலைப்பதிவில் தேடு

ஓசூர்: கார் ஓட்டுநர் வெட்டிக் கொலை - முன்விரோதம் காரணமா? போலீசார் விசாரணை

ஓசூர் அருகே கார் ஓட்டுநரை கடத்திய கும்பல் அவரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்து உடலை சாலையோரத்தில் வீசிச் சென்றுள்ளனர்.

ஓசூர் அடுத்த தளி அருகே எலேசந்திரம் கிராமம் சென்னே கவுண்டன் ஏரிக்கரை சாலையோரம் 30 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்துள்ளார். இதுகுறித்து அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள் தளி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு முரளி, தலைமையிலான போலீசார், தலை, கழுத்து, தாடை உள்ளிட்ட பகுதிகளில் வெட்டுக் காயங்களுடன் கிடந்த சடலத்தை மீட்டு அவரது பேண்ட் பாக்கெட்டில் இருந்த அடையாள அட்டையை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

image

விசாரணயில், கொலை செய்யப்பட்டவர் கர்நாடக மாநிலம் பெங்களூரு தொட்டதோகூர் கிராமத்தைச் சேர்ந்த அஸ்வத் என்பவரின் மகன் சாந்தகுமார் (30) என்பதும், அவர் கார் ஓட்டுநர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து சாந்தகுமார் உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

இதையடுத்து போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், சாந்தகுமார் கடந்த 10 நாட்களுக்கு முன்பு தொட்டதோகூர் பகுதியில் உள்ள மது பார் ஒன்றிற்குச் சென்றுள்ளார். அப்போது அவருக்கும், அங்குள்ள ரவுடி நேபாளி மஞ்சு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ரவுடி நேபாளி மஞ்சு சாந்தகுமாரை தாக்கினார்.

image

இது தொடர்பாக சாந்தகுமார், நேபாளி மஞ்சு மீது பெங்களூரு காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அந்த புகார் மனுவை வாபஸ் பெறச் சொல்லி நேபாளி மஞ்சு, சாந்தகுமாருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். முதலில் வாபஸ் பெற மாட்டேன் என்று கூறிய சாந்தகுமார், நேற்று முன்தினம் புகார் மனுவை பெங்களூரு காவல் நிலையத்தில் வாபஸ் பெற்றுள்ளார்.

இதனிடையே நேற்று முன்தினம் முதல் சாந்தகுமார் மாயமானதை அடுத்து அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடி வந்துள்ளனர். இந்த நிலையில் தான் தளி அருகே அவர் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். இதனால் ஏற்கனவே கொலை மிரட்டல் விடுத்த பெங்களூரு ரவுடி தான் சாந்தகுமாரை தனது கூட்டாளிகளுடன் கடத்தி வந்து கொலை செய்து உடலை போட்டு சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

image

இதனால் தனிப்படை போலீசார் பெங்களூருவுக்கு விரைந்துள்ளனர். தளி அருகே பெங்களூரு கார் ஓட்டுநர் கடத்தி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



source http://puthiyathalaimurai.com/newsview/151460/Hosur-Car-driver-hacked-to-death-Was-it-because-of-animosity-Police-investigation.html

0 Comments:

கருத்துரையிடுக

Thanks for Read the post